3317. திருவி னாயக னுஞ்செழுந் தாமரை
  மருவி னானுந் தொழத்தழன் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.      9

     9. பொ-ரை: திருமகளின் நாயகனாகிய திருமாலும், செழுமை
வாய்ந்த தாமரையில் வீற்றிருந்தருளும் பிரமனும், தொழுது போற்ற
நெருப்பு மலையாக நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள்
பற்றிலிருந்து நீங்கியவராவர்.

     கு-ரை: தழல் - நெருப்பாகிய. மாண்பு அமர் உருவினான் -
பெருமை தங்கிய வடிவினை உடையவன். பரவினார் - துதிப்பவர்.