3320. காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
  ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.            1

     1. பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர்
பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக்
கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக
விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின்
திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

     கு-ரை: காதல் - அன்பு. மல்கி - மிக்கு. ஓதுதல் -
சொல்லுதல். இங்கே செபித்தல் என்னும் பொருளில் வந்தது.