3321. நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
  வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.             2

     2. பொ-ரை: சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக்
கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால்
உச்சரித்தால், நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல
இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம்
போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ‘நமச்சிவாய’
என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.

     கு-ரை: நம்புவார் - விரும்புவார். ‘நம்பும் மேவும் நசை
யாகும்மே’ என்பது தொல்காப்பியம் (சொல். உரி) வம்புநாண்
மலர்வார் மது -வாசனையுடைய புதிய மலரில் சொரிகின்ற தேன்.
இம் மந்திரம் எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது.
நம்பன் சிவ பெருமானுக்கு ஒரு பெயர். “நம்பனே எங்கள் கோவே”
என்ற அப்பர் வாக்கால் அறிக.