3341. தக்கன் வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச்
  சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே.         3

     3. பொ-ரை: சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியைச்
சிதைத்த திருஆலவாய்ச் சொக்கரே! என்னை அஞ்சேல் என்று
அருள்புரிவீராக. இறுமாப்புடைய சமணர்கள் இம்மடத்திற்குப் பற்ற
வைத்த நெருப்பு அத்தகையோர் பக்கமே சார்ந்து பாண்டிய
மன்னனைப் பற்றுவதாக.

     கு-ரை: சொக்கன் - கண்டாரைச் சொக்கச் (மயங்க) செய்யும்
பேரழகுடையவன்; சுந்தரபாண்டியன் என்னும் பெயர் பூண்டமையும்
காண்க. எங்கள் பக்கம் ஏவப்பட்ட தீ, அவர்கள் பக்கமே சென்று
பாண்டியற்கு ஆகுக என்பது நான்காம் அடியின் கருத்து. எக்கர் -
இறுமாப்புடையோர், ஆடையிலிகள் எனினுமாம் (பிங்கலம்).