3350. வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்
  பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.    1

     1. பொ-ரை: வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம்
இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட,
அவர்தம் வாக்கினிடமாக விளங்குபவரே! அவர்கள் துதித்துப்
போற்றுகின்ற பண்புகள் பலவற்றை உடையவரே! சுடுகாட்டைத்
தவிர வேறோர் இடத்தை விரும்பி நில்லாதவரே! கபாலி என்னும்
பெயரையுடையவராய், மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும்
திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே! நீர்
மதுரையம்பதியில் குலாவி விளையாடுவது எம்மால் அறியும் தரத்த
தன்றாயுள்ளது.

     கு-ரை: விழுமியார்கள் - மெய்ஞ்ஞானிகள். வீடு அலால் -
முத்திப்பேற்றையன்றி. அவாய், (வேறொன்றை) அவாவி - விரும்பி
(நிற்றல்) இல் ஆய் - இல்லையாகி. நின் - உனது. கழல் -
திருவடிகளை. (பாடல் வாயிலாய்) ஆல - கொண்டாட. பரவநின்ற
பண்பனே - துதிக்கின்ற பண்பையுடையவனே. காடு அலால் -
முதுகாட்டைத் தவிர. அவாய் - விரும்பி (நிற்றல்). இல்லாய் -
இல்லாதவனே. நீள் - நெடிய. கபாலிமதில் - கபாலி என்னும்
பெயரையுடையமதில், விழுமியார்கள் நின்கழல்பரவநின்ற பண்பனே.
காடு அல்லால் விரும்புதலில்லாதவனே, நான்மாடக் கூடலாகிய
திருவாலவாயில் எழுந்தருளிய பெருமானே, குலாவி விளையாடியது
எம்மால் அறியுந்தரத்ததன்று என்றவாறு.

     வீடல் ஆல ஆய் இல்லாய் - இறத்தல் அகல (பிறத்தற்கு
வாயிலான) தாயில்லாதவரே. விழுமியார்கள் - மெய்யுணர்தலிற்
சீரியோர்கள். நின்கழல் - தேவரீர் திருவடித் தாமரைகளை. பாடல்
- பாடுதலையுடைய. ஆல வாய் இல்லாய் - கல்லால மரத்தினகமே
இல்லமாகக் கொண்டவரே. பரவ நின்ற பண்பனே - மண்ணும்
விண்ணும் மற்றும் வாழ்த்த நின்றருளிய பண்புடையவரே. காடு
அல்லால் அவாய் இல்லாய் - மகா சங்கார காலத்தில் யாவும்
ஒடுங்கும் காடு அல்லாமல் வேறு யாதும் விரும்பியில்லாதவரே.
கபாலிநீள் கடிமதில் - நீண்ட கபாலிஎன்று வழங்கப்பெறும்
கடிமதில் (சூழப்பெற்ற). கூடல் - நான்மாடக் கூடல் (என்றும்
திருமருதந்துறை மதுரை என்றும் பெயர்கொண்ட நகரின்) கண்
உள்ள, ஆலவாயிலாய் - திருவாலவாய் என்று வழங்கப்பெறும்
திருக்கோயிலை உடையவரே. குலாயது என்ன கொள்கை -
(கால்மாறி) ஆடுவதற்கு என்ன கருத்து?

     வீடல் (வீடு + அல்) - அழிதல். ஆல - அகல. அகலல்
என்றதன் மரூஉவே. ஆலல் என்பது. மயிலின் தோகை
சுருங்கியிருந்து அகலும் போது செய்யும் ஒலியை அகவுதல் என்பர்.
அகலுவது தோகை, அகவுவது மயில். இரண்டற்கும் சிறிது வேறுபாடு
இருந்தும், இரண்டும் ஒருசேரக் கருத்துள் வரும் வண்ணம் ‘மயில்
ஆல’ என்பது மரபு. திருஞானசம்பந்த சுவாமிகளே, “மயில் ஆலச்
செருந்திகாலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடு” “வண்டு
பாட, மயில் ஆல, மான்கன்று துள்ள, வரிக்கெண்டை பாயச்
சுனைநீல மொட்டு அலரும் கேதாரம்” என்று அருளியதில், ‘ஆல’
என்ற சொல்லாட்சி உள்ளதை அறிக. ‘அகன்றோர்’ என்பதன்
மரூஉவே ஆன்றோர். “அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்”
(புறம். 128) என்புழி, ஆலும் என்பது ஒலிக்கும் என்ற பொருளதாய்
நின்றதும் ‘ஆலோலம்’ என்னும் வழக்கும் உணர்க. ஆலோலம்
(அகல ஓலம், ஆல ஓலம், ஆலோலம்) என்று மருவும்
முன்பு இருந்த வடிவம் உய்த்துணர்தற்பாலது. ‘பயில் பூஞ் சோலை
மயில் எழுந்து ஆலவும்’ (புறம். 116) என்புழி ‘ஆலவும்’ என்ற
பொருள் பயப்பதுணர்க.: ‘முயங்கல் ஆன்றிசின்’ (புறம். 151) என்புழி,
‘அமைந்தேன்’ என்று பொருளுரைத்ததும், அதற்குரிய அடிச்சொல்
(பகுதி) ஆங்கு இல்லாமையும், அதன் அடி ‘அகல்’ என்பதும்,
அஃது அகன்றிசின் என்பதின் மரூஉவே என்பதும் அறிதல்
சிலர்க்கே எளிது. ‘ஆனாது உருவும் புகழும் ஆகி’ (புறம். 6)
‘அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்’ (புறம். 10) ‘ஆனா
ஈகை அடுபோரண்ணல்’ (புறம். 42) என்னும் இடங்களில்,
எதிர்மறையில் வந்த ‘ஆனாமை’க்கு எவ்வடிவின் அமைந்த சொல்
உடன்பாடாகலாம்? ஆனுதல் எனலாமோ? ஆன்றல் என்றுள்ளதேல்
அதன் பகுதி யாது? அகல் + தல் = அகறல். அகல் - ஆல் என
மருவி, அது, தல் என்னும் விகுதியொடு சேருங்கால் ‘ஆன்றல்’
என்றாயிற்று, ஆகவே, வீடல் ஆல என்றதற்கு இறப்பு அகல என்ற
பொருளே உரியதென்க. எனவே இறப்பின்மை பெறப்பட்டது. ஆய்:
- யாய் என்றதன் மரூஉ. யாய் தன்மைக்கும், ஞாய் முன்னிலைக்கும்,
தாய் படர்க்கைக்கும் உரியன. ‘யாயும் ஞாயும் யாராகியரோ’
(குறுந்தொகை). ‘யாயை வெறுத்ததன் பின்னை விதியை
வெறுத்தனன்’ (வில்லி பாரதம்) ஆய் இல்லாய்:- ஆய் இல்லாமை
பிறப்பின்மையைக் குறிக்கநின்றது. நிற்கவே இறப்பகலப் பிறப்பில்
லாய் என்றவாறாம். ‘தோற்றம் உண்டேல் மரணம் உண்டு’. இறப்பும்
பிறப்பும் இல்லாத கடவுள். ‘பிறப்பில் பெருமான்’
‘பிறப்பினோடிறப்பிலே’ என்னும் இப்பெருமான் திருவாக்குணர்க.

     ஆலவாய் - ஆலமர நிழலகம். வாய் - இடம். இல் வாழும்
இடம். பரவ - வாழ்த்த. ‘பரவுவார் இமையோர்கள்’. ‘யானும்
உன்னைப் பரவுவனே.’ (‘வாழ்த்துவதும்’ எனத்தொடங்குந்
திருவாசகம்). பண்பு - அருட்பண்பு. எண் குணம். காடு - ‘கோயில்
சுடுகாடு’. சருவசங்கார காலத்தில் ‘தானொருவனுமே’ நிற்றலின், அது
சிறந்த வீடாயிற்று. மதுரையில் உள்ள திருமதிலுக்கு, ‘கபாலி’ என்ற
பெயர் உண்டு. கடி - காவல். கூடல்:- கன்னி, கரியமால், காளி,
ஆலவாய் என்னும் நான்கன்கூட்டம் பற்றிய காரணப்பெயர்.
நான்மாடக்கூடலான படலத்து வரலாறும் கொள்ளலாம். ஆலவாய்:
மதுரையில் உள்ள திருக்கோயிலின் பெயர். குலாயது என்ன
கொள்கை:- பின்னர் (பா.2,3,7,10) உள்ள வினாக்களுக்கு ஏற்பப்
பொருள் கொள்க. குலாவுதல் - ஆடுதல்.
“ஆடுங்குலாத்தில்லையாண்டான்” கொள்கையும் கோட்பாடும்
ஒன்றாகா? கொள்கை செய் வினை. கோட்பாடு செயப்பாட்டுவினை.

     கொள்கைக்குக் கோட்பாடு என்று பொருளுரைத்தல் சில
இடத்திலன்றி எல்லா இடத்திலும் பொருந்தாது. “ஒன்று வேறுணர்வும்
இல்லேன் தெளிவற நிறைந்த கோலம், மன்றில் நான் மறைகள் ஏத்த
மானிடர் உய்ய வேண்டி, நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே
நியமம் ஆகும், என்று பூம் புகலி மன்னர் இன்தமிழ்ப் பதிகம்
பாட” எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய கருத்தே இப்பதிகப்
பாடல்களில் அமைந்திருத்தல் காண்க.

     1. வீடு ஆலால வாயிலாய்:- ‘அழிக்கத்தக்க ஆலகால
விடத்தை உண்ட திருவாயினை உடையவரே. 2. கரிய
விடத்தையுடைய பாம்பினால் காட்டப்பட்ட இடத்தை இருப்பாகக்
கொண்டவரே. 3. வீடு பெறற் பொருட்டுக் கல்லால் ஆகிய
அவ்விடத்தில் ஆய்ந்த (விழுமியோர்கள்) (சனகாதி முனிவர்)
பாடலாலவாயிலாய்: பாடுதலினால் அந்த வாக்கினிடம்
விளங்குபவரே. காடலால் அவாயிலாய் - சுடுகாடேயன்றி வேறு
இருப்பிடம் விரும்பாதவரே. குலாயது - எம்முடன் உள்ளே விளங்க
விரவி எழுந்தருளியிருந்து அருள்புரிந்து ஏற்றுக்கொண்டது
என்றாருமுளர்.