3351. பட்டிசைந்த வல்குலாள் பாவையாளோர் பாகமா
  ஒட்டிசைந்த தன்றியும் முச்சியாளொ ருத்தியாக்
கொட்டிசைந்த வாடலாய் கூடலால வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி                            தென்னையே.    2

     2. பொ-ரை: பட்டாடை அணிந்த திருமேனியுடைய
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாவண்ணம்
கொண்டதோடு, சடைமுடியின் உச்சியில் கங்கா தேவியையும்
தாங்கியவரே! கொட்டு என்னும் பறை முழங்க ஆடுபவரே! கூடல்
ஆலவாயில் வீற்றிருந்து அருள்பவரே! அட்டமூர்த்தியாய் விளங்கும்
சிவபெருமானே! உம் அருள்தன்மை எம்மால் எடுத்தியம்ப வல்லதோ.

     கு-ரை: ஒட்டு இசைந்தது - பொருந்தியிருந்தது.