3355. |
பொன்றயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை |
|
பின்றயங்க வாடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடலால வாயிலாய்
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே. 6 |
6.
பொ-ரை: பொன்போல் ஒளிரும் அழகிய சடைமுடி
பின்னால் தாழ்ந்து அசைய நடனம் ஆடுபவரே! தலைக்கோலம்
உடையவரே! பிறப்பற்றவரே! கொன்றைமாலை சூடிய முடி
உடையவரே! நான்மாடக் கூடலில் திருஆலவாயில் வீற்றிருந்தருளும்
இறைவரே! உம் ஒளிமயமான திருநடனத்தை நினைத்து
இன்புற்றிருப்பதே உயிர்கள் உய்தி பெறுதற்குரிய நியமம் ஆகும்.
கு-ரை:
பொன்தயங்கு - பொன்போல் விளங்கும். இலங்கு
- பிரகாசித்த; விளங்குகின்ற. ஒளிநலம் - சிறந்த ஒளியையுடைய,
குளிர்ந்தசடை. நின் - உனது. தயங்கிய - விளங்குகின்ற. ஆடல்
- திருக்கூத்தை. நினைப்பதே - நினைந்து இன்புற்றிருப்பதே.
நியமம் - ஆன்மாக்கள் உய்தி கூடுதற்குரிய நியமம் ஆகும்.
ஆடலே
- ஏ - அசை நிலை. குறியொன்றுமில்லாத கூத்தன்
தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு என்ற
திருவாசகமும் கொண்டு ஈற்றடிப் பொருள் தெளியப்படும்.
|