3359. தேற்றமில் வினைத்தொழிற் றேரருஞ் சமணரும்
  போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன                           நன்மையே.     10

     10. பொ-ரை: தெளிவில்லாத செயல்களைச் செய்யும் புத்தரும்,
சமணரும் உம் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியங்களைத்
தேடிக்கொள்ளாதவராயினர். காலனை மார்க்கண்டேயர்க்காக
உதைத்த திருவடிகளை உடையவரே! கூடல் ஆலவாயில்
வீற்றிருந்தருளும் இறைவரே! உலகனைத்திற்கும் தலைவராக விளங்கி
உயிர்கட்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிர் அல்லிரோ?

     கு-ரை: நால்திசை - அன்மொழித் தொகையாய் உலகம்
என்னும் பொருளிலும், மூர்த்தி என்பது கடவுள் என்னும்
பொருளிலும் வந்தன. “உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே”.
(தி.6.ப.38.பா.1)