3368. பொன்னமல்கு தாமரைப் போதுதாது
       வண்டினம்
அன்னமல்கு தண்டுறை யானைக்காவி
     லண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல
     தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழ றுன்னவல்லர்
     விண்ணையே.                     8

     8. பொ-ரை: இலக்குமி வீற்றிருந்தருளும் தாமரை மலரில்
வண்டினம் ரீங்காரம் செய்யவும், அன்னப்பறவைகள் வைகும்
குளிர்ந்த நீர்நிலைகளின் துறைகளை உடைய திருஆனைக்காவில்
வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை நான்கு
வேதங்களிலுமுள்ள பாடல்களைப் பாடி, அவன் திருவடிகளைப்
போற்றி வணங்குபவர்கள் இப்பூவலகின்கண் குறைவற்ற
செல்வராய்த் திகழ்வதோடு மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.

     கு-ரை: பொன்னம் - இலக்குமி. தனிமொழியும் சாரியை
பெற்றது. திருவடியை நினைக்கும் தன்மைவல்லர் ஆவார்
விண்ணையும் அடைய வல்லர் ஆவார். (விண் - முத்திப்பேறு)
என்றது ஈற்றடியின் பொருள்.