3399. பெற்றவன் முப்புரங்கள் பிழை யாவண்ணம்
       வாளியினாற்
செற்றவன் செஞ்சடையிற் றிகழ் கங்கை
     தனைத்தரித்திட்
டொற்றை விடையினனா யுமை நங்கையொ
     டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிர மாபுரம்
     பேணுமினே.                      6

     6. பொ-ரை: இறைவன் திரிபுர அசுரர்கள் தவத்தினால்
பெற்ற வலிய மூன்றுபுரங்களையும் தப்பாவண்ணம் ஓரம்பினால்
அழித்தவன். சிவந்த சடையில் அழகிய கங்கையைத் தரித்தவன்.
ஒற்றை இடபவாகனம் ஏறினவன். உமாதேவியோடு அவன்
வீற்றிருந்தருளும் பெருமையுடைய திருப்பிரமாபுரம் என்னும்
திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக!

     கு-ரை: பெற்றவன் - இடபவாகனத்தையுடையவன்.
‘பெற்றொன்றேறி’ என வருதலும் காண்க. (தி.2. ப.80. பா.8.)
பெற்றிமையால் - தன்மையோடும்.