3413. திருவினார் போதினானுந் திரு மாலுமொர்
       தெய்வமுன்னித்
தெரிவினாற் காணமாட்டார் திகழ் சேவடி
     சிந்தைசெய்து
பரவினார் பாமெல்லாம் பறையப்படர்
     பேரொளியோ
டொருவனாய் நின்றபெம்மா னுறை யும்மிட
     மொற்றியூரே.                       9

     9. பொ-ரை: இலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில்
வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக்
காணவேண்டும் என நினைத்துத் தம்அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர். சிவபெருமானின் சிவந்த திருவடிகளை
மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப்
படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம்
ஆகும்.

     கு-ரை: திருவின்ஆர் - அழகால்மிகுந்த. ஓர் தெய்வம்
முன்னி - தாங்கள் ஓர் தெய்வமாக நினைத்து. தெரிவில் - தம்
அறிவால்.