3414. தோகையம்பீலிகொள்வார் துவர்க் கூறைகள்
       போர்த்துழல்வார்
ஆகம செல்வனாரை யலர் தூற்றுதல்
     காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி
     னேழுலகும்
ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட
     மொற்றியூரே.                       10

     10. பொ-ரை: நடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு
பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப்
பெருக்கிச் செல்லும் சமணர்களும், துவர் ஆடையைப் போர்த்திய
புத்தர்களும், ஆகமம் அருளிய, ஆகம நெறியில் பூசிக்கப்படும்
செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால், கோட்டான்
போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள்
கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா. ஏழுலகும்
மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஆகம செல்வனாரை - சிவபெருமானை, அலர்
தூற்றுதல் - பழித்துரைத்தல், கூகை - கோட்டான், மாக்கள் -
ஐயறிவுடை விலங்குகளோடொப்பவர். “மாவும் புள்ளும் ஐயறி
வினவே”. (தொல்காப்பியம், 576) ஓகை - மகிழ்ச்சி.