3450. காலனை யோருதையில் லுயிர் வீடுசெய்
       வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய
     பண்டரங்கன்
மாலை மதியொடுநீ ரர வம்புனை
     வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                   2

     2. பொ-ரை: மார்க்கண்டேயர் உயிரைக் கவரவந்த
காலனைக் காலால் உதைத்து உயிர்விடும்படி செய்த சிவபெருமான்
வாரால் கட்டிய வீரக்கழலையணிந்தவன். பால், நெய், தயிர்
முதலியவற்றால் திருமுழுக்காட்டப்பட்டுப் பண்டரங்கம் என்னும்
திருக்கூத்துப் புரிந்தவன். மாலை நேர சந்திரனொடு, கங்கை, பாம்பு
இவற்றை அணிந்த விரிந்த சடையுடையவன். வேல்போன்ற
கண்களையுடைய உமாதேவியோடு அப்பெருமான்
வீற்றிருந்தருளுமிடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: உயிர்வீடுசெய் - உயிர்விடச்செய்த (வீடு - விடுதல்)
வார் - வாராற் கட்டிய கழலையுடையவன். பயின்று ஆடிய -
பலதரமும் திருமஞ்சனம் கொண்டருளுகின்ற, மாலை மதி -
மாலைக்காலத்தில் தோன்றும் சந்திரன், நீர் - கங்கைநீரையும், புனை
- அணிந்த. வார்சடையன் - நெடிய சடையையுடையவன். வேல்
அ(ன்)ன - வேலையொத்த, கண்ணியோடும் - கண்களையுடைய
உமாதேவியோடும். பயின்று - இப்பொருளாதலை “பாலினால்
நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி” என்புழியும் காண்க.
(தி.1.ப.61.பா5.) ஆடிய - ஆடுகின்ற - காலவழுவமைதி.