3468. |
வின்மலை நாணரவம் மிகு வெங்கன |
|
லம்பதனால்
புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித்
தான்புனிதன்
நன்மலர் மேலயனுந் நண்ணு நாரண
னும்மறியாத்
தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே. 9 |
9.
பொ-ரை: சிவபெருமான் மேருமலையை வில்லாகவும்,
வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், மிகுந்த வெப்பமுடைய
அக்கினியை அம்பாகவும் கொண்டு, தீமை செய்த அசுரர்களின்
முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன். நல்ல
தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத
தன்மையன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது
திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும். அங்குத்
திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை:
வில்:- மலை. நாண்:- அரவம். அம்பு:- மிகுவெம்
கனல் - மிகுந்த வெப்பத்தையுடைய அக்கினி. புன்மைசெய் -
தீமையைச் செய்த. தானவர் - அசுரர். கீழ்மக்கள் செயலாதலின்
தீமை புன்மை எனப்பட்டது.
|