3470. தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை
       யீச்சரத்துக்
கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன்
     காழியர்கோன்
நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம்
     பந்தனல்ல
பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை
     பற்றறுமே.                         11

     11. பொ-ரை: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள்
என்னும் திருத்தலத்தில், திருத்தாடகையீச்சரம் என்னும்
திருக்கோயிலில், வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே
பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி,
சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில்
அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப்
பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும்.

     கு-ரை: கண் அயலே - பிறையான் - மேல் நோக்கிய
திருவிழி நெற்றியில் உண்மையால் அதன்மேல் (தலையின் பாகத்தில்)
பிறையை யணிந்தவன், நல்ல - நற்பயனைத் தருதலாகிய, பண் இயல்
பாடல் - பண்ணொடு கூடிய பாடல்.