3498. புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை
       மதமத்தம்
எற்றொழியா வலைபுனலோ டிளமதிய
     மேந்துசடைப்
பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார்
     கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக்
     காட்டாரே.                         7

     7. பொ-ரை: சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க
பாம்பையும், கொன்றை மலரையும், ஊமத்தை மலரையும் அணிந்து,
ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு, பிறைச்சந்திரனையும்
தாங்கிய சடையையுடையவர். தம் திருமேனியில் ஒருபாகமாக
உமாதேவியைக் கொண்டவர். நெற்றிக்கண்ணையுடையவர்.
அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: புற்று இடை - புற்றில் உள்ள. வாள் -
ஒளியையுடைய. அரவினொடு - பாம்பினோடும். புனை - அணிந்த.
மதம் வாசனையையுடைய. மத்தம் - பொன்னூமத்தை (இவற்றோடும்)
எற்று ஒழியா - மோதுதல் ஒழியாத. அலை - அலைவீசும்.
புனலோடு - கங்கைநீரோடு. இளம்மதியம் - பிறைச் சந்திரனையும்.
ஏந்து - தாங்கிய. சடைபெற்று உடையார் - சடையாகிய
பெருக்கத்தை யுடையவர்.