3500. |
ஊண்டானு மொலிகடனஞ் சுடைதலையிற் |
|
பலிகொள்வர்
மாண்டார்தம் மெலும்பணிவர் வரியரவோ
டெழிலாமை
பூண்டாரு மோரிருவ ரறியாமைப்
பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே. 9 |
9.
பொ-ரை: சிவபெருமானின் உணவு ஒலிக்கின்ற கடலில்
தோன்றிய நஞ்சு. உடைந்த தலையாகிய பிரமகபாலத்தை ஏந்திப்
பிச்சையேற்றுத் திரிவார். இறந்த தேவர்களின் எலும்புகளை
மாலையாக அணிந்தவர். வரிகளையுடைய பாம்போடு, அழகிய
ஆமையோட்டையும் அணிந்தவர். திருமால், பிரமன் இருவரும்
அறியா வண்ணம் ஓங்கிய நெருப்புப் பிழம்பாய் நின்றவர். அப்
பெருமான் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
ஊன் தானும் - உணவு தானும்; கடல் நஞ்சு. உடை
- தலையில் பலிகொள்வர். மாண்டார் தம் - இறந்த தேவர்
களுடைய; எலும்பு அணிவர். வரி - நெடிய. (அரவோடு) எழில் -
அழகிய. ஆமை - ஆமையோட்டை. பூண்டாரும்- அணிந்தவரும்.
ஓர்இருவர் - பிரமவிட்டுணுக்கள். அறியாமை - அறியாதவாறு.
பொங்கு - மிகுந்த. (எரியாய் நீண்டாரும் கச்சி நெறிக் காரைக்
காட்டாரே) இருவர் என்பது தொகைக் குறிப்பு.
|