3514. சுரருலகு நரர்கள்பயி றரணிதல
       முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
     கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
     வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை
     பரவவளர் பிரமபுரமே.              1

     1. பொ-ரை: தேவர் வாழ்கின்ற விண்ணுலகமும், மனிதர்கள்
வாழ்கின்ற இப்பூவுலகமும் வலிமை அழியும்படி துன்புறுத்திய,
காவலாகக் கோட்டை மதில்களையுடைய முப்புரங்களும் எரிந்து
சாம்பலாகுமாறு ஓர் அம்பை விரைவாகச் செலுத்தும்
ஆற்றலுடையவர் சிவபெருமான். எல்லாச் சுரங்களும் வரிசைபெற
அமைந்த, வேதசிரமாகிய உபநிடதஉரைகளை வரன்முறையோடு
ஓதி, அரனாரின் எழில் மிகுந்த புகழை எடுத்துரைத்துச்
சரணடைந்து அவர் இணை மலரடியைத் தான் வரம் பெற
வேண்டிப் பிரமன் துதித்தலால் புகழால் ஓங்கிய பிரமாபுரம்
எனப்பட்டது.

     கு-ரை: சுரர் உலகும் - தேவலோகமும். நரர்கள் பயில் -
மனிதர் வாழும். தரணி தலம் - பூலோகமும், முரண் அழிய -
வலிமை அழியும்படி. (அதனால்,) அரணம் - காவலாகிய. முப்புரம்
- முப்புரமுடிய. சரவிசை - அம்பின் விசையால், விரவுவகை எரிய
- கலந்து பல இடமும் எரியும்படி. கொள் - (அவ்வம்பைக்)
கொண்ட, கரம் உடைய, பரமன் இடமாம். நிரை - வரிசையாக,
நிறைகொள் - நிறைவையுடைய. வரன்முறையின் வரு -
வரன்முறையில் ஓதிவருகின்ற. சுருதி சிரம் - வேத முடிவாகிய
உபநிடதங்களின், உரையினால் - வசனங்களினால். உயர் -
எவரினும் உயர்ந்த, அரன் - சிவபெருமானின். எழில் கொள் -
அழகையுடைய, சரண இணை - இரு திருவடிகளையும். வரம்
அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி, பிரமன். பரவ -
துதிக்க. வளர் - புகழால் ஓங்கிய. பிரமபுரமே - பிரமபுரம் என்னும்
பெயர்பெற்ற தலமாம்.