3522. |
விண்பயில மண்பகிரி வண்பிரம |
|
னெண்பெரிய
பண்படை கொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள்
தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர்
புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
பண்புகளை சண்பைநகரே. 9 |
9.
பொ-ரை: சிறந்த பிரமன் அன்ன உரு எடுத்து
ஆகாயத்தில் சென்றும், மிக்க மதிப்புடைய தகுதியான சக்கராயுதப்
படையைக் கொண்ட திருமால் பன்றி உரு எடுத்து மண்ணைப்
பிளந்து சென்றும் காணப்பெறாது, கண்ணால் பற்றக்கூடிய ஒளி
நீங்க, நுண்ணிய பொருளாக, இனிய கீர்த்தியைக் கொண்ட
அகண்டனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மண்ணின்
நுண்புழுதிபோல் அராவிய இரும்பு உலக்கைத்தூள் சண்பைப்
புல்லாக முளைக்க அவற்றால் யாதவ குமாரர்கள் ஒருவரையொருவர்
அடித்துக்கொண்டு இறந்து விண்ணுலகை அடைய, துருவாச
முனிவரை இழிவு செய்து பழிகொண்ட தன் இனத்தவர்கட்கு நற்கதி
உண்டாகுமாறும் சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள்
தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால்,
சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும்.
கு-ரை:
மண்பகிரி - மண்ணைப்பிளக்கும் பன்றி (யாகி). எண்
பெரிய - மிக்க மதிப்புடைய. பண் - தகுதியான, படைகொள் -
சக்கராயுதத்தைக் கொண்ட. மால் - திருமால் (பூமியிற் சென்றும்)
வண்பிரமன் - சிறந்த பிரமன். விண்பயில - ஆகாயத்தில் சென்றும்,
கண்புரியும் - கண்ணாற் பற்றக்கூடிய. ஒண்பு - ஒளி. ஒழிய - நீங்க.
நுண் பொருள்கள் - அவற்றிற்கு எட்டாததாகிய நுண்ணிய
பொருள்களாக. தண்புகழ்கொள் - இனிய கீர்த்தியைக்கொண்ட.
கண்டன் இடமாம் - அகண்டனாகிய சிவபெருமானின் இடமாகும்.
அகண்டன் என்பது முதற்குறைந்து நின்றது. மண்பரியும் -
உலகத்தைக் காக்கின்ற, ஒண்பு ஒழிய - ஆண்மை நீங்க. நுண்பு -
அற்பர்களாகிய. சகர் - யாதவர்கள். புண்பயில - ஒருவரோடு
ஒருவர் அடித்துக் கொண்டு செத்து. விண்படர - விண்ணுலகை
அடைய. பண்பமுனி தவப்பண்பையுடைய துருவாசமுனிவர். கண்பழி
செய் - கருத்தக்க பழியைச் செய்த. பண்பு - சாபத்தை. களை -
நீக்கியதனால். சண்பை மொழி - சண்பையென்று மொழியப்படும்.
சண்பைநகர்.
|