3546. நின்றுகவ ளம்பலகொள் கையரொடு
       மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன்
     மேவுமலை நாடிவினவில்
குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர்
     சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
     யாடுகா ளத்திமலையே.     10

     10. பொ- ரை: நின்று கொண்டே கவளமாக உணவு
உண்ணும் சமணர்களும், உடம்பில் போர்த்த போர்வையுடைய
புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும்
சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நெருங்கிய சோலைகளில்
உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று
தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி
மலையாகும்.

     கு - ரை: நின்று- நின்று கொண்டே, கவளம் பல கொள்
- பல கவளங்களை யுண்ணுகின்ற, கையரொடு - கையையுடைய
சமணர்களுடன். மெய்யில் இடு - உடம்பில் போர்த்த,
போர்வையரும் - போர்வையை உடையவர்களாகிய புத்தர்களும்,
நன்றி - தனது அனந்த கல்யாண குணங்களை, அறியாதவகை -
தெரியாத விதம்; நின்ற - அவர்களை மறைத்து நின்ற. (சிவன்
மேவும் மலையை) நாடி - ஆராய்ந்து, வினவில் - கேட்பீர்களே
யானால், பிடி - பெண் யானைகள்; குன்றில் - மலையில், துன்று -
நெருங்கிய, சந்தின் முறி - சந்தனத் தழைகளை, கன்றினொடு
தின்று - தமது கன்றினுடனே தின்று, குலவி - மகிழ்ந்து திரிந்து,
விளையாடுகின்ற காளத்திமலை, கையர் - அற்பர் என இரு
பொருளும் கொள்க. மலைவளம் கூறியது: தன்மை நவிற்சியணி.