3568. ஈசனெமை யாளுடைய வெந்தைபெரு மானிறைவ
       னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை
     யாவவனிடம்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ
     நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல்
     வைகாவிலே.                       10

     10. பொ-ரை: சிவபெருமானை எம்மை ஆட்கொள்ளும்
தந்தை, தலைவன், இறைவன் என்று போற்றுதல் செய்யாத
சமணர்கள், புத்தர்கள் இவர்களின் சித்தத்தில் புகாத அப்பெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, எல்லா தேசத்தாரும் கூடிநின்று போற்ற,
நிலைத்த புகழுடைய அப்பெருமானை நறுமணமிக்க நல்மலர்களைத்
தூவி வழிபட நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும்.

     கு-ரை: பேசுதல் செயா - பேசாத, சித்தம் அணையா -
மனத்திற் புகுதாத. அவனது - அத்தகையானது. (இடம்) தேசம்
அது எலாம் - எல்லாத் தேசத்தினரும், மருவிநின்று -
பொருந்திநின்று, பரவி - துதித்து, திகழ நின்ற புகழோன் - புகழ்
நிலைத்து விளங்குவோனாகிய சிவபெருமானை. வாசமலரான பல
தூவி - வாசமிக்க பல மலர்களைத் தூவி (ஆன சொல்லுருபு)
அணையும் - வந்து சேரும் பதியாகிய, நல்வைகாவில், தேசமது
எலாம் மருவிநின்று பரவி வாசமலரான பல தூவித் திகழநின்ற
புகழோனையணையும் பதியெனக் கூட்டுக. ஆன - பூசைக்குரிய
வாகிய எனினும் ஆம். “பூத்தேர்ந் தாயன கொண்டு” என
முன்வந்தது. பல வகையான மலர் என்றும் கொள்க. அது “பரந்து
பல்லாய் மலர் இட்டு” என்னும் திருவாசகக் (தி.8) கருத்து.