3572. |
காலையொடு துந்துபிகள் சங்குகுழல் |
|
யாழ்முழவு
காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்க
ளேத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
யேத்தவினை பறையுமுடனே. 3 |
3.
பொ-ரை: துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு முதலிய
வாத்தியங்கள் ஒலிக்க, காலையும் மாலையும் வழிபாடு செய்து
முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான்
தோலாடையை விரும்பி அணிந்து, அதன்மேல் ஒளிவிடும்
நாகத்தைக் கச்சாகக் கட்டி, அழகுறப் பால்போன்ற
திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான். அவனுடைய
திருவடிகளைப் போற்றி வணங்க, உடனே வினையாவும் நீங்கும்.
கு-ரை:
துந்துபிகள் - சங்கு, குழல், யாழ், முழவு -
இவ்வாத்தியங்களோடு. காமருவுசீர் - அழகிய சிறப்பினையுடைய.
காலையொடு - காலையிலும். மாலை - மாலையிலும். வழிபாடு
செய்து - பூசித்து. மாதவர்கள் - முனிவர்கள். ஏத்தி - துதித்து.
மகிழ் - மகிழ்கின்ற மாகறல் உளான். தோலையுடை பேணி -
தோலை ஆடையாக விரும்பி. (அதன்மேல்) ஓர் சுடர்நாகம் -
ஒளி பொருந்திய பாம்பை. அசையா - கச்சாகக்கட்டி; அழகிது
ஆய் - அழகை யுடையதாக. பாலை அ(ன்)ன பாலையொத்த.
நீறுபுனைவான் - திருநீற்றைப் பூசுபவராகிய சிவபெருமான்.
பால்கொள் வெண்ணீற்றாய் என்பது திருவாசகம்; அடிகள்
ஏத்த - திருவடிகளைத் துதிக்க. உடனே வினை பறையும் -
உடனே வினைநீங்கும்.
|