3582. நீரின்மலி புன்சடையர் நீளரவு
       கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது வேந்தியுடை
     கோவணமு மானினுரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
     காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர
     மேத்தவினை பற்றழியுமே.         2

     2. பொ-ரை: சிவபெருமான் கங்கையைச் சடையில்
தாங்கியவர். நீண்ட பாம்பைக் கச்சாகக் கட்டியவர். கூர்மையான
இலைபோன்ற வடிவுடைய கொடிய சூலப்படையை ஏந்தியவர்.
கோவண ஆடை அணிந்தவர். மான் தோலையும் அணிந்தவர்.
கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக அணிந்தவர்.
அத்தகைய கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் தலமாவது பூமியில்
மிக்க புகழையுடைய திருப்பழையாறை ஆகும். அங்குள்ள
திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப் போற்றி
வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும்.

     கு-ரை: நீரின்மலி புன்சடையர் - கங்கை நீரினால் நனைந்த
புன்சடையை உடையவர். நீள் அரவு கச்சை (அது) - அவர்கட்கும்
கச்சையாவது நீண்ட பாம்பு. நச்சு இலையது ஓர் கூரின் மலிசூலம்
(அது) ஏந்தி - நஞ்சு பூசிய இலை வடிவத்தையுடையதாகிய ஓர்
கூரின் மிகுந்த சூலத்தினை ஏந்தினவர். உடைகோவணமும் மானின்
உரித்தோல் - உடையும் கோவணமும் மானினுடைய உரித்த தோல்.
காரின்மலி கொன்றை விரிதார் - கார்காலத்தில் மிக மலரும்
கொன்றை விரிந்த மாலையாகும். கடவுள் - இத்தகைய கடவுள்.
காதல்செய்து - விரும்பி. மேய - மேவிய. நகர்தான் - தலமாவது.
பாரின் மலிசீர் - பூமியில் மிகுந்த புகழையுடைய. பழைசை -
திருப்பழையாறையில் உள்ள. பட்டிசரம் - திருப்பட்டீச்சரத்தை.
ஏத்த - துதிக்க. வினை - நமது வினைகள், பற்று அழியும் -
அடியோடு அழியும். கொன்றை கார்காலத்தில் மலர்வதென்பதைக்
“கண்ணி கார்நறுங் கொன்றை” என்னும் புறநானூற்றாலும் அறிக.
- (1)