3623. மந்தமுர வங்கடல் வளங்கெழுவு
       காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன
     வேவுசிவ னின்னருளினால்
சந்தமிவை தண்டமிழி னின்னிசை
     யெனப்பரவு பாடலுலகில்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில்
     வார்களுயர் வானுலகமே.              11

     11. பொ-ரை: மந்தமான ஓசையுடைய கடல்வளமிக்க
சீகாழிப்பதியில் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த
ஞானசம்பந்தன், திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு
அணிந்த சிவபெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம்
விளங்கும் இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடு
பவர்கள் உயர்ந்த சிவலோகத்தில் வாழ்வர்.

     கு-ரை: மந்தம் முரவம் - மந்தமான ஓசையையுடைய. கடல்
வளம் கெழுவு - கடலினால் பெறத்தகும் வளங்கள் பொருந்திய.
காழிபதி - சீகாழி யென்னும் தலத்தில். மன்னு - நிலைபெற்ற, கவுணி
- கவுணிய கோத்திரத்தினர். (‘கவுணிபந்தன் என இயைக்க’
இருபெயரொட்டுப் பண்புத் தாகை.) (வெந்த) பொடி நீறு -
பொடியாகிய நீறு (நீறணியும் சிவன் என்க). சந்தம் இவை - சந்த
இசையோடு கூடிய இப்பாடல்கள். தண்தமிழின் இன்னிசை - குளிர்ந்த
தமிழ் மொழியின் இனிய இசைப்பாடல்கள். என - என்று. பரவு
பாடல் - துதித்துப் பாடிய பாடல். உயர் வான் உலகம் - சிவலோகத்தில். பயில்வர் - வாழ்வார்கள்.