3624. |
பொன்னியல்
பொருப்பரையன் மங்கையொரு |
|
பங்கர்புன றங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
வித்தகர் மகிழ்ந்துறைவிடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள
வள்ளைபட ரள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
சேருதவி மாணிகுழியே. 1
|
1.
பொ-ரை: சிவபெருமான் பொன்மயமான இமயமலை
அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக்
கொண்டவர். கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன்
பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான
அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, வரப்பின்மேல்
இளவள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில், இள
வாளை மீன்கள் துள்ளிப்பாய, இள எருமைகள் அதில் படிந்து
வீடுசேரும், நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும்.
கு-ரை:
பொன் இயல் - பொன்மயமான. பொருப்பு அரையன்
- இமயமலை அரசனது. மங்கை ஒரு பங்கர் - புதல்வியாராகிய
அம்பிகையை ஒரு பாகமாக உடையவர். புனல் தங்கு சடைமேல் -
கங்கை நீர் தங்கும் சடையின்மேல். வன்னியொடு - வன்னிப்
பத்திரத்துடன், மத்தம் மலர் - பொன்னூமத்தைப்பூவை. வைத்த -
அணிந்த. விறல் வித்தகர் - வலிய சமர்த்தராகிய சிவபெருமான்.
(மகிழ்ந்து) உறைவு இடம் - தங்கும் இடமாவது. இளவள்ளை படர்
அள்ளல் வயல்வாய் -
இளம் வள்ளைக் கொடிகள் (வரப்பின்மேல்)
படர்ந்த சேற்றையுடைய வயலில். கன்னி இளவாளை - மிக்க
இளமை பொருந்திய வாளைமீன்கள். குதிகொள்ள - துதித்துத்
தாவும்படி. இளமேதிகள் - இள எருமைகள். மன்னி - தங்கி. படிந்து
- மூழ்கி. மனைசேர் - வீட்டிற்குச் சேரும். உதவி மாணிகுழி -
திருமாணி குழியென்னும் பதியேயாம். இத்தலம் உதவி என்னும்
அடைமொழியோடு இணைத்தே கூறப்படுகிறதன் காரணம் விசாரித்து
அறியத்தக்கது.
|