3627. |
நித்தநிய
மத்தொழில னாகிநெடு |
|
மால்குறள
னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய
நின்றசிவ லோகனிடமாம்்
கொத்தலரமலர்ப்பொழிலி
னீடுகுல
மஞ்ஞைநட மாடலதுகண்
டொத்தவரி வண்டுக ளுலாவியிசை
பாடுதவி மாணிகுழியே. 4 |
4.
பொ-ரை: நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம்
பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒரு
முகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவ
பெருமான் வீற்றிருந்தருளும் தலம், கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய
சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட
அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு
இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும்.
கு-ரை:
நித்தம் - நாடோறும். நியமத் தொழிலனாகி -
அநுட்டானம் முதலிய நியமமாய்ப் பூண்டவனாய். நெடுமால் -
திருமால். குறளன் ஆகி - வாமன வடிவங்கொண்டு. மிகவும் சித்தம்
(அது) ஒருக்கி - மனத்தை நன்கு ஒரு முகப்படுத்தி. (வழிபாடு
செய்ய) நின்ற - இருந்த. சிவலோகன் - சிவலோக நாயகனாகிய
சிவபெருமான் (இடமாம்.) கொத்து அலர் - கொத்துக்களிலே
மலர்ந்த. மலர்ப் பொழிலில் - மலர்களையுடைய சோலையில். நீடுகுல
மஞ்ஞை - சிறந்த மயில்கள். நடமாடல் அது - நடித்தலை. கண்டு -
பார்த்து, வரி வண்டுகள் - கீற்றுகளையுடைய வண்டுகள். உலாவி -
சுற்றி. ஒத்த இசைபாடு - ஒத்த இசைகளைப் பாடுகின்ற
(உதவிமாணிகுழி).
|