3635. நீறுவரி யாடரவொ டாமைமன
       வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ
     லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை
     நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள
     மாரும்வயல் வேதிகுடியே.              1

     1. பொ - ரை: திருநீற்றினையும், வரிகளையுடைய ஆடும்
பாம்பையும், ஆமையோட்டையும், அக்குமணியையும், எலும்பு
மாலையையும் சிவபெருமான் அணிந்துள்ளார். அவர் இட
பவாகனத்தில் ஏறுவார். யாவரும் வணங்கத்தக்க முதல்வராகிய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பாளைகள் விரிந்த
பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும், பழங்கள் கனிந்த வாழைத்
தோட்டங்களிலும் நறுமணம் வீச, மடுக்களில் ஆணும், பெண்ணுமான
வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும், வயல்வளமிக்க
திருவேதிகுடி ஆகும்.

     கு-ரை: நீறு - திருநீற்றையும். வரி - நெடிய, ஆடு அரவொடு
- ஆடும் பாம்புடனே. ஆமை - ஆமையோட்டையும். மனவு -
அக்குப் பாசியையும். என்புநிரை - எலும்பு மாலையையும். பூண்பர் -
அணிவார். இடபம் ஏறுவர் - காளையை ஏறிநடத்துவார். யாவரும் -
 எவரும். இறைஞ்சு - வணங்கத்தக்க. கழல் - திருவடிகளையுடைய,
ஆதியர் - முதல்வர் ஆகிய சிவபெருமான் (இருந்த இடம் ஆம்.)
தாறு விரி - பாளைகள் விரிந்த. பூகம் - கமுகஞ்சோலைகளிலும்,
(பழங்கள் கனிந்த) மலிவாழை - அடர்ந்த வாழைத் தோட்டங்களிலும், விரை நாற - வாசனை வீசவும். மடுவில் - மடுக்களில். இணைவாளை
- ஆணும் பெண்ணுமாக வாளைமீன் இணைகள். வேறு பிரியாது
விளையாட - வேறாகப் பிரியாமல் விளையாடவும். வயல் வளம்
ஆரும் - வயல்களில் வளங்கள் மிகுந்தும் உள்ள. வேதிகுடி -
திருவேதி குடியே. ஆமை என்ற சொல், ஆமை யோட்டைக்
குறிப்பது முதலாகு பெயர். மனவு - அக்குப்பாசி, வேட்டுவக் கோலம்
தாங்கிய பொழுது அணிந்தது. நிறை - வரிசை; இங்கு மாலையைக்
குறித்தது. அயன் அரி முதலிய தேவர்கள் செருக்குறா வண்ணம் பலவூழிகளிலும் இறந்த அவர்தம் எலும்பை மாலையாக அணிந்தவர்.
(கந்தபுராணம் ததீசியுத்தரப் படலம் - 12) காண்க. ஏறுவர் + யாவரும்
= ஏறுவரி யாவரும். விரைநாற என்பதற்கேற்பப் 'பழங்கள் கனிந்த'
என அடை வருவித்துரைக்கப்பட்டது.