3639. சொக்கர்துணை மிக்கவெயி லுக்கற
       முனிந்துதொழு மூவர்மகிழத்
தக்கவருள் பக்கமுற வைத்தவர
     னாரினிது தங்குநகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல்
     பற்றிவரி வண்டிசைகுலாம்
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர்
     போகநல்கு வேதிகுடியே.              5

    5.பொ - ரை: சிவபெருமான் மிக்க அழகுடையவன்.
கோபத்தால். சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது,
அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள்
மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது, மாமரச் சோலைகளில்
மகளிர் விளையாடும் ஆரவாரமும், மகளிரின் மேனி ஒளியானது
மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும்
ஒலியும், தேவர்களை போற்றும் ஒலியும் கொண்டு, தன்னையடைந்து
வழிபடுபவர்களின் அச்சமும், துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும்
திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: சொக்கர் - பேரழகு உடையவரும். துணைமிக்க -
தங்களுக்குத் தாங்கள் உதவி செய்துகொள்வதில் மிக்க. எயில் -
மதிலிலிருந்த அசுரர். உக்கு - பொடியாகி. அற - ஒழிய. முனிந்து -
கோபித்து. தொழும்மூவர் - அவர்களுக்குள் தன்னை வணங்கிய
மூவர். மகிழ - மகிழும்படியாக, பக்கம் உற - தன் பக்கத்திலே
யிருக்கும்படி. தக்க அருள்வைத்த - சிறந்த கருணைசெய்த
(அரனார்) இனிது- நன்கு, (தங்கும்) நகர்தான் - தலமாவது. அரவம்
உற்ற - விளையாடும் மகளிரின் ஆரவாரம் பொருந்திய. கொக்கு
பொழில் - மாமரச்சோலைகளில். நிழல் - மகளிரின் மேனியின்
ஒளியானது. வெற்றிபற்றி - மாந்தளிர்களை வென்ற வெற்றியைப்
பற்றி. வரிவண்டு - கீற்றுக்களையுடைய வண்டுகள். இசைகுலாம் -
பாராட்டி இசைபாடிக்கொண்டாடும் (திருவேதிகுடி). மிக்க அமரர் -
உடலின் ஒளியால் மிக்க தேவர்கள். மெச்சி - அம்மகளிர்க்கு
மெச்சிப் (பாராட்டும் திருவேதிகுடி) அச்சம் இடர்போக
(தன்னையடைந்தவர்களுக்கு) அச்சமும் துன்பமும் நீங்க. இனிது -
நன்மையை. நல்கு - அளிக்கும். (திருவேதிகுடி) பாராட்டும் என
ஒரு சொல் வருவித்துரைக்க.