3650. தொடைத்தலை மலைத்திதழி துன்னிய
       வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ
     மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு
     வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி
     தீரநல்கு கோகரணமே.                 5

      5. பொ-ரை: சிவபெருமான் தலைமாலை அணிந்தவர்.
சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்களையும்
அணிந்தவர். எம் முதல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன்
வேடர்கள் நட்புக் கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில்
குடைந்து மூழ்கி வணங்க அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை
நீக்கி அருள்புரியும் திருக்கோகரணமாகும்.

     கு-ரை: தொடைத்தலை மலைத்து - தலைமாலையை அணிந்து.
முடியின் சடைத்தலை. இதழி - கொன்றைமலரையும். எருக்கு -
எருக்க மலரையும். அலரி - அலரிமலரையும். வன்னி - வன்னிப்
பத்திரங்களையும். மிலைச்சிய - அணிந்த, எம்ஆதி - எமது
முதல்வராகிய சிவபெருமான். பயில்கின்ற இடமாம் - வாழ்கின்ற
இடமாம். படைத்தலைபிடித்து - ஆயுதங்களின் அடிப்பாகங்களைப்
பற்றி. மறம் - வெற்றி பொருந்திய. வாளர்களொடு - வாளாயுதத்தை
யேந்திய வீரர்களுடனே. வேடர்கள் பயின்று. குழுமி - வேடர்களை
நண்பு கொண்டு கூடி. அலைநதி - அலைகளையுடைய நதியில்.
குடைத்து - குடைந்து. பாடிய - முழுகி (வணங்க). நின்று -
(அவர்க்கு எதிரில் தோன்றி) நின்று. பழி - பழிபாவம் முதலியவை.
தீர - நீங்குமாறு. நல்கு - அருள்புரியும் கோகரணம். குதைத்து
எதுகை நோக்கி வலித்தது.