3651. நீறுதிரு மேனிமிசை யாடிநிறை
       வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு
     பலிக்குவரு மீசனிடமாம்
ஆறுசம யங்களும்வி ரும்பியடி
     பேணியர னாகமமிகக்
கூறுமனம் வேறிரதி வந்தடியர்
     கம்பம்வரு கோகரணமே.               6

     6. பொ-ரை: சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில்
பூசியவர். திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி
இசைபாடிப் பலி ஏற்று வருவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி
வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும், மனத்தில் சிவானந்தம் மேலிட
உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற
திருக்கோகரணமாகும்.

     கு-ரை: திருமேனிமிசை, நீறு ஆடி - விபூதி பூசி. வார் கழல்
சிலம்பு நிறை ஒலி செய - கச்சிறுக்கிய கழலும் சிலம்பும் நிறைந்த
ஒலி செய்ய. ஏறு - இடபமானது. விளையாடவிசைகொண்டு -
விளையாடு வதைப்போற் செல்ல விசையாகச் செலுத்தி, இடுபலிக்கு
வரும் - மாதர் இடும் பிச்சைக்கு வருகின்ற, ஈசன் இடமாம். ஆறு
சமயங்களும் - ஆறுசமயத்தவர்களும், விரும்பி, அடிபேணி -
திருவடியைக்கருதி. அரன் ஆகமம் மிகக்கூறு - சிவபெருமானது
ஆகம நெறிகளைப் பயன்மிகும்படி சொல்லுகின்ற கோகரணம்.
(மனம்) வேறு இரதி வந்து - உலக இன்பத்தின் வேறான சிவானந்தம்
விளைய. அடியர் - அடியார்கள். கம்பம் வரு - அவ்வானந்தம்
மேலீட்டால் உடல்நடுக்கம் வரப்பெறுகின்ற கோகரணம் -
திருக்கோகரணமே. "ஆகம் விண்டு கம்பம் வந்து" (தி.8
திருச்சதகம்.72)