3654. |
வில்லிமையி
னால்விற லரக்கனுயிர் |
|
செற்றவனும்
வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடவெரி
யாகியுயர் கின்றபரனூர்
எல்லையில்
வரைத்தகடல் வட்டமு
மிறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையி லிளங்குறவர் தம்மயிர்
புலர்த்திவளர் கோகரணமே. 9
|
9.
பொ-ரை: வில்லாற்றலால் வலிமையுடைய அரக்கனான
இராவணனின் உயிரைப் போக்கிய திருமாலும், வேதத்தை ஓதும்
பிரமனும், தம்முள் மாறுபட்டு இல்லையென்றும், உள்ளது என்றும்
அறியமுடியாதவாறு தேட, நெருப்புவடிவாகி ஓங்கி நின்ற சிவ
பெருமான் வீற்றிருந்தருளும் ஊர், எல்லையாக அளவுபடுத்திய
கடலால் சூழப்பட்ட பூவுலகத்தோரும், தேவலோகத்தவரும் வணங்க,
தினைப்புனங்களில் இளங்குறவர்கள் நறுமணம் கமழும் கூந்தலை
உலர்த்தும் எழில்மிகுந்த திருக்கோகரணம் ஆகும்.
கு-ரை:
வில்லிமையினால் - வில்தொழிலால், விறல் அரக்கன்.
உயிர் செற்றவனும் - வெற்றியையுடைய இராவணனது உயிரை
அழித்ததிருமாலும். வேத முதலோன் (உம்) - பிரமனும். இகலி
இல்லையுளது என்று நேட - தம்முள் மாறுபட்டு இல்லை என்றும்
உள்ளது என்றும் அறிய முடியாதவாறு தேட. எரியாகி - நெருப்பு
வடிவமாகி. உயர்கின்ற - ஓங்கிய. பரன் - மேலான கடவுளின். ஊர்
-ஊராகும். எல்லையில் வரைத்த கடல் வட்டமும் - எல்லையாக அளவு படுத்திய கடலாற் சூழப்பட்ட
பூமியும், (தேவலோகமும்)
இறைஞ்சி - வணங்கி. நிறை - நிறைகின்ற (கோகரணம்) வாசம்உருவ
- வாசனை (கூந்தலில் இருந்து) திக்குகளிற் சென்று பாய்ந்து உருவ.
கொல்லையில் - தினைப்புனங்களில். இளம்குறவர். தம் மயிர்
புலர்த்தி - தமது கூந்தலைக் காயவைத்து. வளர் - பெருகுகின்ற
கோகரணமே. குறவர் என்பது மயிர் புலர்த்தல் என்னுந்
தொழிலினால் ஆண்பாலையொழித்தது. இது, தொழிலிற் பிரிந்த
ஆண் ஒழிமிகுசொல். இவர் வாழ்க்கைப்பட்டாரென்பது போல.
"பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல்கூடா வழக்கு
வழிப்பட்டன." (தொல். சொல்.50.)
|