3655. நேசமின் மனச்சமணர் தேரர்க
 

     ணிரந்தமொழி பொய்களகல்வித்
தாசைகொண் மனத்தையடி யாரவர்
     தமக்கருளு மங்கணனிடம்
 பாசம தறுத்தவனி யிற்பெயர்கள்
     பத்துடைய மன்னனவனைக்
கூசவகை கண்டுபி னவற்கருள்க
     ணல்கவல கோகரணமே.              10

     10. பொ-ரை: உள்ளன்பில்லாத சமணர்களும், புத்தர்களும்
கூறும் சொற்களைப் பொய்யென நீக்கி, தன்னிடத்து ஆசை
கொள்ளும்படியான மனத்தையுடைய அடியவர்களுக்கு அருளும்
அழகிய கருணையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது,
இவ்வரிய பூவுலகில் பத்துப்பெயர்களையுடைய
அர்ச்சுனனின் பாசத்தைப் போக்கி, அவன் நாணும்படி போர்செய்து
பின் அருள் புரிந்த திருக்கோகரணம் ஆகும்.

     கு-ரை:நேசம் இல் - உள்ளன்பில்லாத. மனத்து அமணர் -
மனத்தையுடைய சமணர்களும், தேரர்கள் - புத்தர்களும், நிரந்த
மொழி - ஒழுங்குடையதுபோற்கூறும் சொற்கள். பொய்ச்சொற்களாம்.
அகல்வித்து - நீக்கி. ஆசைகொள் மனத்து - தன்னிடத்தில் ஆசை
கொள்ளும்படியான மனத்தையுடைய, அடியாரவர் தமக்கு அருளும்,
அங்கணன் சிவபெருமானது இடம், அவனியில் - பூமியில். பெயர்கள்
பத்துடைய அரசனான அர்ச்சுனனைப் பாசமது அறுத்து, கூச - நாண
வகைகண்டுபின். அவற்கு. அருள்கள் நல்க வல - அவருக்கு
வரங்கள் கொடுக்க வல்லதாகிய கோகரணம்.