3679. கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி
       நூலொடுகு லாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட
     வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில்
     கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ
     தவளிவண லூரே.                     1

     1. பொ-ரை: இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை
மாலை அணிந்தவர். முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்.
திருவெண்ணீறு பூசியவர். இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர்.
ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, இரும்பு ஆகிய
கோட்டைகளின் மதில்களை, மேருமலையை வில்லாகக் கொண்டு
அம்பு எய்து எரித்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திரு
அவளிவணல்லூர் ஆகும்.

     கு-ரை: கொம்பு - பூங்கொம்பு. இரிய - தம்மைப் பிரியும்படி.
(தாமும் பிரிந்து வந்து வண்டு) உலவு - திரிகின்ற. கொன்றை -
கொன்றைமாலை. புரிநூலொடு - பூணூலொடு. குலாவி - மார்பின்கண்
பூண்டு. தம் பரிசினோடு - தம் பரிசுடையாரென்னும் தன்மையோடு.
நீறு தட வந்து - திருநீறு பூசி. இடபம் ஏறி, கல் - மேருமலை. வரை
- தாம் வரைந்து கொண்டவில் ஆக, (மதில் எய்த பெருமான்) கம்
- ஆகாயத்தின்கண். பருத்த. செம்பொன், (வெள்ளி, இரும்பு
இவற்றால்) ஆகிய. நெடும்மாடம் - நெடிய மாடங்களையுடைய.
மதில் - திரிபுரங்கள், எரிய அம்பு எய்தபெருமான் உறைவது
அவளிவணல்லூரே. செம்பொன் - எனவே. வெண்பொன்,
கரும்பொன்னும் உபலக் கணத்தாற் பெற்றாம், தேனுக்காகக்
கொன்றை மரம் சென்று, பூக்கள் பறிக்கப்பட்டு மாலையாகச்
சிவபெருமான் மார்பிற் கிடத்தலால், வறுங் கொம்பைப் பிரிந்த
வண்டு, அம்மாலையிற் சுற்றித் திரிகின்ற மார்பினன் என்பது
கொம்பு...... கொன்றை" என்றதன் கருத்து. அது கொண்டு கருதின்
'தமக்கு இன்பம் கிடைக்குமென்று உலகப் பொருளிற் சென்ற மனம்,
திரும்பிச் சிவபெருமானை யடையின் பல்வகை இன்பங்களும்
பெறலாமென்று உலாவும்' - எனவும் ஓர் பொருள்தொனிக்கின்றது.
பல்வகை இன்பமும் சிவன் அருளுவன் என்பதை,

"அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே
     யன்பொடு தன்னையஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத்துள்ளமள் ளூறுந்
     தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
     பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
     கொண்டசோ ளேச்சரத் தானே."

என்னும் திருவிசைப்பா(தி.9)வால் அறிக. தம் பரிசுடையார் என்பது
தலத்து இறைவன் திருப்பெயர்.