3695. புற்றரவர் நெற்றியொர்க ணொற்றைவிடை
 

     யூர்வரடை யாளம்
சுற்றமிருள் பற்றியபல் பூதமிசை
     பாடநசை யாலே
 
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கண்
     முற்றுமெயின் மாளச்
செற்றவ ரிருப்பிட நெருக்குபுன
     லார்திருந லூரே.                    6

      6. பொ-ரை: சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பை
அணிந்தவர், நெற்றியில் ஒரு கண் உடையவர். இடப வாகனத்தில்
அமர்ந்தவர். இவையே அவரது அடையாளமாகும். அத்தகையவர்
அடையாளம் காணமுடியாத இருட்டில் பல பூதங்கள் இசைபாட
நடனம்புரிபவர். விருப்பத்தோடு வேதங்களைக் கற்ற அந்தணர்களால்
உணர்ந்து போற்றப்படுபவர். பகையசுரர்களின் முப்புரங்கள் எரியும்
படி சினந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நீர்வளம்
நிறைந்த திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: புற்றில் வாழும் பாம்பை அணிபவர், நெற்றிக்
கண்ணோடு ஒரு விடையை ஏறிச் செலுத்துபவர். அடையாளம் -
(இவை அடையாளமாக.) சுற்றம் - சுற்றமாக. இருள்பற்றிய - இருளில்
விளக்கு ஏந்திய. பல்பூதம் - பலபூதம் இசைபாட (உடையவர்).
நசையால் - விருப்பத்தோடு. முனிவர்கள். மறைகற்று உணரப்படுபவர். பற்றலர்கள் - பகைவர்களின். எயில்முற்றும் மாள -மதில் முழுதும்
ஒழியும்படி. செற்றவர் - கோபித்தவர். நெருக்கு புனல் ஆர் - மிகுந்த நீர்வளத்தையுடைய. சந்தம்நோக்கி. நெருங்கு என்பது வலித்தல்
விகாரம் பெற்றது. "பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்ற" என்ற
திருத்தாண்டகத்தின்படி இருள்பற்றிய என்பதற்குப் பொருள் கொள்க.