3704. மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு
       மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது
     விலகினார்
சாதக வுருவியல் கானிடை யுமைவெரு
     வுறவரு
போதக வுரியதண் மருவின ருறைபதி
     புறவமே.                           4

     4. பொ-ரை: பெரிய தவம் செய்த மறையவனான
மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை
பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர்
விலகும் படி செய்தவரும், பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி
அஞ்சும் படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: மறையவன் - மார்க்கண்டேயர். மேதகு - சிறந்த,
(திருவடி) இறையுற - சற்றே பொருந்திய மாத்திரத்தில் (உயிர்
விலகுவித்தார்) விலகினார் - பிறவினை விகுதி குன்றியது. கான்
இடை - காட்டில். (உமை) வெருவுஉற - அஞ்ச. சாதகஉரு -
பூதாகிருதியோடு, உரு இயல் - மூன்றாம் வேற்றுமைத் தொகை.
போதகம் -யானை. அதள் - தோல். மருவினர் - போர்த்தவர்.