3709. தேனக மருவிய செறிதரு முளரிசெய்
 

     தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை
     யொருவனும்
 வானகம் வரையக மறிகடல் நிலனெனு
     மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி
     புறவமே.                           9

     9. பொ-ரை: உள்ளிடத்தில் தேன் பொருந்திய, இதழ்கள் பல
செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து, சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு, கரண, புவன, போகங்களைப்
படைக்கும் பிரமனும், ஏழுவகையாக அமைந்த வானகம், மலை, கடல், நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும்
அறிதற்கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது
திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: அகம் - உள்ளிடத்தில், தேன் மருவிய - தேன்
பொருந்திய, செறிதரு - இதழ்நெருங்கிய, தவிசு செய்முளரியினில்
எனமாறிக்கூட்டி ஆசனமாகக்கொண்ட தாமரைப்பூவிலிருந்து
சிவபெருமான் திருவருளாணை மேற்கொண்டு உயிர்வர்க்கங்கட்குத்
தநுகரண புவனபோகங்களைப் படைப்பிக்கின்ற பிரமன் என்பது
இரண்டாம் அடியின் கருத்து:- ஊன் - உடம்பு; தநு. அகம் - மனம்
முதலிய கரணம் (உபலட்சணம்). மருவிய (நுகர்பொருள்கள்)
பொருந்திய, புலன் - புலம், இடம், புவனம். நுகர்வு - போகமுமாகிய
இவற்றைப் படைக்கும். உணர்வு உடை - அறிவையுடைய, ஒருவனும் (பிரமனும்,) ஆகாயம் பூமியாகிய ஏழு உலகங்களையும் உணவாக
உடைய திருமாலும். வரை அகம் - மலைநிலம். பூமி - மறிகடல்
நிலன் எனப்பட்டது.