3744. சிற்றிடை யரிவைதன் வனமுலை
 

     யிணையொடு செறிதரும்
நற்றிற முறுகழு மலநகர்
     ஞானசம் பந்தன
 கொற்றவ னெதிரிடை யெரியினி
     லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபது மறிபவர்
     துயரிலர் தூயரே.                    11

     11. பொ-ரை: சிறிய இடையினையுடைய உமாதேவியின்
அழகிய முலைகளோடு நெருங்கியிருக்கும் திருநள்ளாற்று
இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதிய ஏடுகளை, நன்மை
தரும் கழுமலநகரில் அவதரித்த திருஞானசம்பந்தன், பாண்டிய
மன்னனின் எதிரில், நெருப்பின் நடுவில் இடுகின்றபோது கூறிய,
இத்திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் துயரற்றவர்கள் ஆவர்.
மும்மலங்களினின்றும் நீங்கித் தூயராய் விளங்குவர்.

     கு-ரை: ஞானசம்பந்தன் கொற்றவன் எதிர் - நின்ற சீர்
நெடுமாற நாயனாராகிய அரசர் எதிரில். இடை எரியினில் - நெருப்பு
நடுவில். துயர் தூயர் - ஓர் சொல் நயம்.