3749. |
பண்டலை
மழலைசெ யாழென மொழியுமை |
|
பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை
குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய வருள்புரி
விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர்
விளமரே. 5 |
5.
பொ-ரை: பண்ணின் இசையை ஒலிக்கும் யாழ்போன்ற
இனியமொழி பேசும் உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு
பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருடைய, அசைகின்ற
ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்துள்ள திருவடிகளைத் தொழும்
அடியவர்களை வினை சாராது. விண்ணுலகிலுள்ள தேவர்கள்
தொழுது போற்ற அருள்செய்யும் பெருங்கருணையாளர். பிரமனுடைய
மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவரும் இயல்பாகவே
பாசங்களின் நீங்கியவருமான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும்
வளம் மிகுந்த நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
பண்தலை - பண்ணினிடத்ததாகிய. (பண்ணோடு
கூடிய) மழலை செய்யாழ்என - இனிமையைச் செய்கின்ற யாழ்போல.
மொழி - பேசுகின்ற. (உமையைப் பாகமாகக்கொண்டு) அலை -
அசைகின்ற. குரைகழல் - ஒலிக்கும் வீரகண்டை யணிந்த.
(அடிதொழும் அவர் வினை குறுகிலர்) விண்டலை - விண்ணின்
இடத்துள்ள. (அமரர்கள் துதிசெய அருள்புரி.) விறலினர் - அருட்பெருக்கை யுடையவர். மழலை
இனிமைக்கு ஆகியது,
காரியவாகுபெயர். விறல் - வலிமை; அருளின் வலிமை;
அருட்பெருக்கு.
|