3750. |
மனைகடொ
றிடுபலி யதுகொள்வர் மதிபொதி |
|
சடையினர்
கனைகட லடுவிட மமுதுசெய் கறையணி
மிடறினர்
முனைகெட வருமதி ளெரிசெய்த வவர்கழல்
பரவுவார்
வினைகெட வருள்புரி தொழிலினர் செழுநகர்
விளமரே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமான் தாருகவனத்தில் மனைகள்தொறும்
சென்று பிச்சை ஏற்றவர். சந்திரனைத் தரித்த சடையுடையவர்.
ஒலிக்கின்ற கடலில் தோன்றி உயிர்களைக் கொல்ல வந்த விடத்தை
அமுதமாக உண்டு கறை படிந்த அழகிய கண்டத்தர். போர்
முனைப்பு உடன் எழுந்த பகையசுரர்களின் மும்மதில்களை
எரித்தவர்.தம் திருவடிகளை வணங்குபவர்களின் வினைகெடும்படி
அருள்புரியும் தொழிலுடையவர். இத்தகைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் செழிப்பான நகர் திருவிளமர் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
மனைகள்தோறும், இடு, பலி (அது) கொள்வர், மதி.
பொதி தங்கிய. கனைகடல் - ஒலிக்கின்ற, கடலில் தோன்றி. அடு -
உயிர்களைக் கொல்ல வந்தவிடம். அமுதுசெய் - உண்டதனால்
எய்திய. (கறை அணி) மிடறினர் - கழுத்தையுடையவர். மிடற்றினர் -
எனற்பாலது. மிடறினர் என நின்றது சந்தம் நோக்கி. முனை -
போரில். கெட வரும் - அழிய. வந்தமதிள் - புரங்களை. மதில்,
மதிள் என வந்தது. ல,ள வொற்றுமை. தமது திருவடியை
வணங்குபவரின் வினைகெட அருள் புரிதலைத் தவிர, பிறதொழில்
இல்லாதவர் என்பது, பிற்பகுதியின் கருத்து.
|