3753. தொண்டசை யுறவரு துயருறு காலனை
       மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற வாரழ
     லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனி
     லளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில்
     விளமரே.                           9

     9. பொ-ரை: சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின்
நிலை அழியும்படி, மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த
காலனை மாளும் படி செய்து, பின்னர்த் தம் ஆணையின்படி
ஒழுகுமாறு செய்தவர் சிவ பெருமான். பிரமன், திருமால் என்னும்
இருவரையும் அஞ்சுவிக்கக் காண்டற்கரிய அழல் வடிவானவர்.
மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர். இத்தகைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டினங்கள் விரிந்த
மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும் சோலைகளை
உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: தொண்டு - சிவனுக்கு அடிமை பூணும் திருத்
தொண்டின் நிலையே. அசைவு உற - அழிய. வரு - மார்க்
கண்டேயர் மேல் வந்த. துயர் உறு - துன்பம் உறுத்தவரும்
(காலனை). தொண்டு அசைவு உற என்ற கருத்து. சிவனடியார்க்கு
ஒருவர் தீங்கிழைப்பரேல் அது அடிமைத் திறத்தையே அழிப்பதாகும் என்பதாம். அது:- “என் போலிகளும்மையினித் தெளியார் அடியார்
படுவதிதுவே யாகில், அன்பேயமையும்” என்பதாற் கொள்க. (தி.4.
ப.1.பா.9) காலனை மாள்வுறச் (செய்து) பின், அண்டல் செய்து -
தன்னையண்டித் தன் ஆணைவழி நிற்றலையும் செய்து, இங்குச்
செய்து என்பதனைப் பின்னும் கூட்டுக. அண்டல், அண்டுதல், அண்டி வாழ்தல் எச்ச உம்மை வருவித்துரைக்க. துயர் உறு என்பதில்
பிறவினை விகுதி தொக்கு நின்றது. மேல்வெருவுற என்பதும் அது.
இருவரை - பிரம விட்டுணுக்களாகிய இருவரையும். வெருவுற -
அஞ்சுவிக்க. ஆர் அழல் ஆயினான் - காண்டற்கரிய அழல் வடிவு
ஆயினவன். இருவர் என்பது தொகைக் குறிப்பு. கொண்டல் செய்தரு
- மேகம்போலும் கரிய. திருமிடற்றினர் - அழகிய கண்டத்தை
யுடையவர். அளியினம் - வண்டின் கூட்டங்கள். விண்டு இசை உறு - ஒலியை வெளிப்படுத்திப் பாடுதலையுடைய. (மலர்) நறு மது விரி -
நல்ல தேனைப் பெருகச் சொரிகின்ற பொழில்.