3758. பொன்னுமா மணிகொழித்தெறிபுனற்
 

     கரைகள்வாய் நுரைகளுந்திக
கன்னிமார் முலைநலங் கவரவந்
     தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங்
     கொச்சையே மருவினாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகா
     ணெஞ்சமே யஞ்சனீயே                3

     3. பொ-ரை: நெஞ்சமே! பொன்னையும், பெரிய மணிகளையும்
ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக்
கொண்டு, கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய
வாசனைத் திரவியங்கள் அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி
சூழ்ந்திருக்க, உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கொச்சைவயம்
என்னும் இத்திருத்தலத்தையே எக்காலத்தும் பொருந்தி வாழ்வாயாக!
அவ்வாறு வாழ்ந்தால் தொன்றுதொட்ட வரும் மலநோயானது இனி
உன்னைத் தொடராது.நீ அஞ்சல் வேண்டா.

     கு-ரை: மகளிர் மார்பிற்பூசிய சந்தனம் முதலிய வாசனைத்
திரவியங்களைக் கவரும் பொருட்டு வந்து பாயும் என்றது
தற்குறிப்பேற்ற அணி. முன்னைநோய் - தொன்றுதொட்ட மலநோய்
(தொடருமாறு இல்லை).