3761. சுற்றமு மக்களுந் தொக்கவத்
 

     தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப்
பங்கமா வுள்கினானோர்
 குற்றமில்லடியவர் குழுமிய
     வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவ மருள்புரி நம்பனை
     நம்பிடாய் நாளுநெஞ்சே.               6

     6. பொ-ரை: நெஞ்சமே! சிவனை நினையாது செய்த தக்கன்
வேள்வியைத் தகர்த்து, அதற்குத் துணையாக நின்ற
சுற்றத்தார்களையும், மற்றவர்களையும் தண்டித்து, தன் மனைவி
தாட்சாயனி தக்கன் மகளான தோடம் நீங்க இமயமலை அரையன்
மகளாதற்கும், தன் திருமேனியில் ஒரு பாகமாதற்கும்
நினைத்தருளியவனும், ஒரு குற்றமில்லாத அடியவர்கள் குழுமிய
வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து, திரிகரணங்களும் ஒன்றிச் சிவவழிபாடு செய்பவர்கட்கு
அதன் பயனை அளித்து அருள்புரிகின்றவனுமாகிய சிவபெருமானை
எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக!

     கு-ரை: தக்கன் மகளான தோடம் நீங்க, இமய மலையரையன்
மகளாதற்கும், தன் உடம்பில் ஒரு பங்கில் வைத்தற்கும்
நினைத்தருளியவன் என்பது இரண்டாம் அடியின் கருத்து.
மால்வரையுமை (ஆக) நங்கையைப்பங்கம் (ஆக) எனக் கூட்டுக. ஓர்
குற்றம் இல் - ஒரு குற்றமும் இல்லாத. அடியவர் குழுமிய வீதிசூழ்
கொச்சை மேவி. நல்தவம் - நல்லதவத்தின் பயன்களை. அருள்புரி
நம்பனை நம்புவாயாக.