3762. கொண்டலார் வந்திடக் கோலவார்
       பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமா
     முகிறனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களு மமரரு
     முனிவரும் பணியவாலம்
உண்டமா கண்டனார் தம்மையே
     யுள்குநீ யஞ்சனெஞ்சே.                7

     7. பொ-ரை: நெஞ்சமே! மேகங்கள் வந்தவுடன், அழகிய
நீண்ட சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி, தங்கட்கு முன்னே
காணப்படுகின்ற மூங்கில்களைப் பற்றி ஏறி, அந்தக் கரிய
மேகங்களைக் கையால் பிடிக்கின்ற திருக்கொச்சைவயம் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, அண்ட வானவர்களும்,
தேவர்களும், முனிவர்களும் வந்து பணிய, ஆலகால விடத்தினை
உண்டு அவர்களைக் காத்த பெருமையையுடைய கழுத்தினையுடைய
சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத் தியானிப்பாயாக! நீ
அஞ்சல் வேண்டா.

     கு-ரை: கோலம் - அழகை உடைய. வார் - நெடிய.
பொழில்களில் - சோலைகளில். கொண்டலார் - மேகங்கள். வந்திட
- வந்து படிய. (குரங்குகள் கூடிக்கொண்டு தங்களுக்கு முன்னே
காணப்படுகின்ற) கழைபிடித்து ஏறி - மூங்கில்களைப்பற்றி ஏறி.
மாமுகிறனை - கரிய அம்மேகத்தை. கதுவு - கையாற் பிடிக்கின்ற
(கொச்சை). கொண்டல், கொண்டலார் என்று உயர்த்தற் கண் வந்தது,
அதன் சிறப்புநோக்கி. “ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவியும்,
ஒன்றனைக்கூறும் பன்மைக் கிளவியும்...சொல்லாறல்ல” (தொல்.
சொல். கிளவியாக்கம். சூத்திரம்.27). ‘தென்றலார் புகுந்துலவும்
திருத்தோணிபுரத்துறையும் கொன்றை வார்சடையார்’ (தி.1.ப.60.பா.7.)
என வந்தமையும் காண்க. அமரரும் - தேவர்களும், அண்ட
வானவர்களும் - அவரொழிந்த, ஏனைய அண்டங்களிலுள்ள, அயன்
அரி முதலிய தேவர்களும்.