3791. காண்டகு மலைமகள் கதிர்நிலா
       முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங்
     காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை
     மீதெழு கொடிமதியம்
தீண்டிவந் துலவிய திருநெல்வேலி
     யுறை செல்வர்தாமே.                 4

     4. பொ-ரை: நெருங்கிய பெரிய மாடங்களிலும்,
மாளிகைகளிலும், மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திர
மண்டலத்தைத் தொட்டு அசைகின்ற திருநெல்வேலியில்
வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான், தரிசிப்பதற்கு
இனிய மலை மகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால் புன்முறுவல்
செய்து அருகிலிருந்தருளவும், பாம்பை ஆபரணமாக அணிந்து
ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு
நடனமாடுதலை விரும்புபவர். அவரை வழிபடுவீர்களாக.

     கு-ரை: அழகுபொருந்திய உமாதேவியார் ஒளியையுடைய
வரிசையான பற்களால் சிரிப்புடையவராய் அருகிலிருந்தருளவும்,
அதற்கேற்ற வண்ணம் நடந்து கொள்ளாமல் பாம்பை அணிந்த.
ஊருக்குப் புறம்பே உள்ளதாகிய சுடுகாடு, நாடகமேடையாகக் கூத்து
ஆடுதலைப் பேணியவராய் இருப்பர், திருநெல்வேலியுறை செல்வர்.
மாடங்களிலும், மாளிகைகளிலும் கட்டியுள்ள கொடி, சந்திரமண்டலம்
வரை உயர்ந்து சந்திரனைமோதி உலாவும் திருநெல்வேலி உறை
செல்வன் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா இயல்பினன்
என்பது முதலிரண்டடிகளின் கருத்து. பேணி - குறிப்பு வினைமுற்று
முற்றெச்சமாயிற்று. “புறங்காடரங்கா நடம் ஆடவல்லாய்” என
(தி.4.ப.1.பா.10.) இத்தொடர் வாகீசர் வாய்மையிலும் வழங்கியுள்ளது.