3802. நீற்றினர் நீண்டவார் சடையினர்
       படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றின ரெரிபுரி கரத்தினர்
     புரத்துளா ருயிரைவவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற
     நனிவருங் குலவுகங்கை
ஆற்றின ரரிவையோ டிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.               4

     4. பொ-ரை: சிவபெருமான் திருவெண்ணீறணிந்த மேனியர்.
நீண்டு தொங்கும் சடையினர். கரங்களில் பலவகை ஆயுதங்கனை
ஏந்தியுள்ளவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். வெண்ணிற
இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கரத்தினர். திரிபுர
அசுரர்களின் உயிரைக் கவரும் எமனாக விளங்கியவர். கொடிபோன்ற இடையுடைய உமாதேவி கோபம் கொள்ளும்படி கங்கையாகிய
நங்கையை மகிழ்வுடன் சடையில் தாங்கியவர். அப்பெருமான்
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம்
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வார் - தொங்கும். (சடையினர்.) படையினர் -
ஆயுதங்களை யேந்தியவர். நிமலர் - அடைந்தவரது மலம்
இல்லையாகச் செய்பவர். எரிபுரிகரத்தினர் - நெருப்பை
விரும்பியேந்தும் கையையுடையவர், திரிபுரத்து அசுரர்களுக்கு
உயிரைக் கவரும் யமனாக இருப்பவர். கொடி இடை - பூங்கொடி
போலும் இடையையுடைய உமாதேவியார், முனிவு உற - பிணங்க.
நனிவரும் குலவு கங்கை - மிகப் பொருந்திய மகிழ்ச்சியை உடைய
கங்கை.