3805. சங்கவார் குழையினர் தழலன
       வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவ ரருந்தவ
     முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின்
     வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவா ரிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.                7

     7. பொ-ரை: இறைவர் சங்கினாலாகிய குழையைக்
காதிலணிந்துள்ளவர். நெருப்புப் போன்ற செந்நிற மேனியர். தமது
அருளால் எங்கும் வியாபித்துள்ளவர். அரிய தவம் செய்யும்
முனிவர்களுக்குத் தம்மையே அளித்து மகிழ்பவர். அவர் அங்கு,
பொங்கும் நீர் பரந்த அரிசிலாற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு,
வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருந்தருளும் இடம்
ஆற்றின் வடகரையில் உள்ள திருஅம்பர்மாகாளம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: தமது அருளே எங்குமாய் இருந்தவர்:- “யாதொரு
பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய்முக்கண்,
ஆதியையடையும் அம்மா அங்கது போலத் தொல்லை, வேதம
துரைக்க நின்ற வியன்புகழனைத்தும் மேலாம், நாதனையணுகும்
எல்லா நதிகளும் கடல் சென்றென்ன”. (கந்தபுராணம் உபதேசப்
படலம் 17) பரந்தரிசிலின் - பரந்த அரிசிலாற்றை, (திருத்தம் -
தீர்த்தம்) அரிசில் ஆற்றைத் தீர்த்தமாகக் கொண்டு, அதன்
வடகரை இருப்பு இடம் அம்பர்மாகாளம்.