3806. பொருசிலை மதனனைப் பொடிபட
       விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற
     வடர்த்தவர் கோயில்கூறில்
பெருசிலை நலமணி பீலியோ
     டேலமும் பெருகநுந்தும்
அரிசிலின் வடகரை யழகம
     ரம்பர்மா காளந்தானே.                8

     8. பொ-ரை: சிவபெருமான், போர்புரியும் வில்லுடைய
மன்மதனை எரித்துச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து
விழித்தவர். சோலைகளையுடைய இலங்கை மன்னனைக் கயிலை
மலையின்கீழ் அடர்த்த அப்பெருமான் வீற்றிருந்தருளும் கோயில்,
பெரிய மலையினின்றும் நவமணிகளையும், மயிற்பீலி ஏலம்
முதலியவற்றையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வரும்
அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள அழகிய திரு
அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: பொருசிலை - போர்புரியும் வில், மதனன் - மன்மதன்,
இலங்கைக் குரிசில் - இராவணன் (குரிசில் இங்கு அரசனென்னும்
பொருள் மாத்திரை குறித்தது) குலவரை - சிறந்தமலை, (கயிலை)
குலம் - சிறந்த. “குன்றை நகர்க்குலக் கவியே வல்லான்” என்ற
காஞ்சிப்புராணச் செய்யுளாலும் அறிக. பெரியமலையினின்றும்,
நவமணி முதலியவற்றை மிகுதியும் அடித்துக்கொண்டுவரும் அரிசில்
ஆறு என்பது மூன்றாம் அடியின் கருத்து.