3812. விளங்குதண் பொழிலணி வெங்குருமேவிய
  இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள வுறுபிணி யிலரே.          3

     3. பொ-ரை: பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த
சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும், இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய
சிவபெருமானே! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள
உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத்
தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர்.

     கு-ரை: விளங்கு - மூவுலகிலும் விளங்கும் பெருமைவாய்ந்த,
வெங்குரு என்க. விளங்கும் பொழில் எனக்கொள்ளின், செழிப்புடைய
சோலை என்க. என்றும் ஓர் பெற்றியாய்க் கலைவளரப்
பெறாமையால்,இளம்பிறையென்னப்பட்டது, “முற்றாத பான் மதியஞ்
சூடினானே” என்றார் அப்பர் மூர்த்திகளும். சடையீராகிய உமது
இரண்டு திருவடிகளையும் நினைக்க உற்ற பிணி நீங்கப்பெறுவார்கள்.
“மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல அடி” (தி.6.ப.6.பா.9.) என்ற கருத்து.