3821. யாழ்நரம் பின்னிசை யின்னம்பர் மேவிய
  தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துய ரருவினை யிலரே.                  2

     2. பொ-ரை: யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட
தாழ்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே! நீண்டு தாழ்ந்த
சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள்
பெருந்துன்பத்திலிருந்தும், அதற்குக் காரணமான அரிய
வினையிலிருந்தும் நீங்கியவராவர்.

     கு-ரை: யாழின் நரம்பிசை முதலிய பலவாத்திய
ஓசைகளையுடைய திருவின்னம்பர் என்பது முதலடியின் கருத்து.
காண்க: “குழலொலி யாழொலிகூத்தொலியேத்தொலி யெங்கும் குழாம்
பெருகி.” (தி.9 திருப்பல்லாண்டு. 11) சார்பவர் - சார்புணர்ந்து
சார்புகெடச் சார்பவர், பெருந்துயர் நேரினும் அதினின்றும்
நீங்கப்பெறுதலோடு அதற்குக் காரணமாகிய அரிய வினையும்
இல்லாதவர் ஆவார்கள். ஆழ்துயர் - பெருந்துயர்.