3832. நிச்சலு மடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
  கச்சிள வரவசைத் தீர
கச்சிள வரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே.                 2

     2. பொ-ரை: நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற,
நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, இளமையான பாம்பைக் கச்சாக இடையில்
அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு கச்சாக இளம் பாம்பை
அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே துன்பங்களைக் கண்டு
அச்சப்படாதவர், கொடிய வினைகளும் இல்லாதவர்.

     கு-ரை: நிச்சல் - நித்தல்; நித்தம் நித்தல் என்பதன் போலி,
இளஅரவு - இளம்பாம்பைக் கச்சு (ஆக) அசைத்தீரே -
கட்டியருளினீரே. என்றும் இளமையுடையவன் ஆகையால்
அவனைச்சார்ந்தனவும் இளமையுடையனவே ஆயின, “இளநாகமோடு” என முன்னும் வந்தமை காண்க. (தி.1. ப.1. பா.2.) காண்பவர் -
தரிசிப்பவர்.